Pages

Friday, March 11, 2011









இப்படத்திற்கான கவிதைகள் கீழே தொடர்கின்றன. கவிதை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றிகள்...




ஆட்கொள்ளும் ஆபத்து

மீண்டும்

எதிர்பார்த்த சந்தை
இன்னும் சில நாளில்...

எபபடியாகினும் உங்கள் பலவீனங்களை
தூசி தட்டி எடுத்து முந்திக்கொண்டு
முகவரியாக்கி வைப்பீர்கள் என்ற
அசைக்க முடியாத நம்பிக்கையுடன்
முற்றுகையிடத் தயாராகிறர்கள்
சில வியாபா¡¢கள்.
இப்படியொரு வியாபாரத்தை
உலகம் இதுவரை கண்டிராத பிரமிப்புடன்
கவர்ச்சி விளம்பரங்களை கட்டவிழ்க்கும்
வியாபாரத் தந்திரங்களை நீங்கள்
வெகுவாக வரவேற்கிற வரையில்
சந்தை கலை கட்டாதா என்ன?
எந்தச் சிந்தனைத் திசையிலும்
உங்களை வெளியேற்றிட விடாது
இலவசத்திற்குள் கட்டிப்போட்டிருக்கும்
வியாபாரிகள் காரிசனத்துடன் வருகிறார்கள்
உங்கள் பேராசைக்குத் தீணியாய்
கரன்சிகளை திணிப்பத்ற்காக.
சமுதாயப் படுகொலை நஞ்சை
வழங்க வரும் அவர்கள்முன் இனியும்
அடிபணிந்து விடாமல்
எதிர்கால சமுதாயத்தை பாதுகாக்கும்
கடமை உயிரோட்டமாய் உள்ளதை
விலைபோகும் முன் உணருங்கள்.
சரித்திரத்தை மாற்றும் சக்தி
வலிமையான மனச்சாட்சியிடம் உள்ளது
நாகரிக அரக்கனான
கரன்சிகளில் இல்லை சிந்தியுங்கள்

- இரத்தினமூர்த்தி - 9344201063

கொட்டும்

அளவுக்கு அதிகமாகக்

கொட்டினால் நிச்சயம்

கொட்டும் தேளாய் பணம்.

-கா.சுப்ரமணியம், ஓய்வு தலைமை ஆசிரியர் திருப்பூர்.

Tuesday, March 8, 2011

நிகழ்வுகள் - முன்னறிவிப்பு - தேதி மாற்றப்பட்டது

வணக்கம் நண்பர்களே வரும் 13-03-2001 அன்று நமது அடுத்த நிகழ்வு நடைபெற உள்ளது. அனைவரும் வருக. இதோ அழைப்பிதழ்...

அழைப்பிதழில் இடம் பெற்றிருக்கும் படத்திற்கான கவிதையோடு நிகழ்விற்கு வாருங்கள் நண்பர்களே...

நிகழ்விற்கு வர இயலாதவர்கள் தங்கள் கவிதையை மின்னஞ்சலில் அனுப்பலாம். தேர்வாகும் கவிதை அன்றைய நிகழ்வில் உங்கள் சார்பாக வாசிக்கப்படும், இவ்வலைப் பூவிலும் வெளியிடப்படும்.

இது போன்ற கருத்துப்படங்கள் வரவேற்கப்படுகின்றன. அடுத்தடுத்து வரும் அழைப்பிதழ்களில் ஓவியர் பெயரோடு இடம் பெறும். ஆர்வமுள்ளவர்கள் அனுப்பவும்.

முக்கிய அறிவிப்பு-

நண்பர்களே சில தவிர்க்க முடியாத காரணகளால் 13-3-2011 அன்று நடைபெற இருந்த இந்நிகழ்வு வரும் 17-4-2011 அன்று மாலை 6 மணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.

நிகழ்வுகள் - 2011

நிகழ்வு - 19

8வது திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் 2011 பிப் 28 ஜனவரி 7 வரை தொடர்ந்து 10 நாட்கள் பல் வேறு உலகப் படங்கள் திரையிடப்பட்டன. புத்தகக் கண்காட்சி வளாகத்தின் மேல் தளத்தில் செயல்பட்ட நம் அரங்கத்திற்கு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.
வலைதளங்களில் உலகத் திரைப்படங்கள் குறித்து எழுதி வரும் திரு முரளி மற்றும் ராமன் போன்றோர் வந்திருந்து பங்களிப்புச் செய்தனர். வரும் காலங்களில் நம்மோடு இணைந்து பணியாற்ற ஆர்வம் தெரிவித்தனர். அவர்களை உளமாற வரவேற்போம்.
உலகத் திரைப்பட ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. 40 புதிய ஆர்வலர்கள் செய்தி அனுப்பித் தங்கள் பெயர்களைப் பதிந்து கொண்டார்கள்.

நிகழ்வு - 20

13-02-2011 அன்று

இலக்கிய அமர்வு நடைபெற்றது. முதலாவதாக கனவு வெளியீடான ‘பருத்திக்காடு’ சிறுகதைத் தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்து உலகத் திரைப்படம் திரையிடப்பட்டது. பிங்கேற்பாளர்கள் குறைந்த அளவே வந்திருந்தார்கள். நிகழ்வை மேலும் வலுவாக்க வந்திருந்தவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. தகவல் தொடர்பில் அனைவரும் முனைப்போடு பங்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. உலகத் திரைப்படத் திரையிடல்களுக்கான வரவேற்பை அனைத்துப் பங்கேற்பாளர்களும் முன் வைத்தனர்/

Sunday, July 11, 2010

வண்ணம் கலைக் கூடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்-திருப்பூர் வடக்கு .

நிகழ்வுகள் - 2008முதல்2010வரை.

நிகழ்வு; 001

27/09/2008 அன்று...
காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திருப்பூர் பத்மாவதிபுரம் கேபிகே நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிறுவர் திரைப்பட விழா நடத்தப்பட்டது.
விழாவைத் தொடக்கி வைத்து மாவட்ட செயலாளர் தோழர் ஈஸ்வரன் பேசினார்.திருப்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்து 116 சிறுவர் சிறுமியர் வந்து கலந்து கொண்டார்கள். தமுஎச குறித்த அறிமுகம் செய்யப்பட்டது.
சில்ரன் ஆப் ஹெவன், பூங்கா, அமெரிக்கா பாடல், சென்ஸ், உறவின்கதை, என்று தணியும், ரெட்பலூன் ஆகிய படங்கள் திரையிடப்பட்டு சிறுவர்களின் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டன. சிறுவர் திரைப்படங்களின் மீது சிறுவர்களிடம் மிகையான ஆர்வம் காணப்பட்டது.
தாண்டவக்கோன் திரைப்படங்களைத் திரையிட்டு, தொகுப்புரை வழங்கி நிகழ்வை நடத்தினார். மதியம் 1.30 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப் பட்டது. மதியம் 2.30 மணிக்கு தோழர் நிசார் அகமது விழாவை நிறைவு செய்து உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் - தனபால், குழந்தைவேலு,வே.நா.கணேஷ்குமார், நிசார் அகமது, பாண்டியராஜன், ரவிக்குமார், பி.ஆர்.கணேசன், தாண்டவக்கோன், ஆர்.ஈஸ்வரன் லட்சுமணன், சந்திரசேகரன், நாகராஜ், சண்முகம் (வள்ளுவர் நகர்)ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வு; 002
9/11/2008 அன்று...
காலை திருப்பூர் காந்திநகர் சர்வோதய சங்க வளாகத்தில் மாதாந்திர இலக்கிய அமர்வு நடத்தப்பட்டது.
காலை 10.30 மணிக்கு தாண்டவக்கோன் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. வரவேற்புரை நிகழ்த்தினார் ஆசிரியர் திரு. கணேஷ்குமார்.
கவியரங்க நிகழ்ச்சியில் ஏற்கனவே தரப்பட்ட அழைப்பிதழ் ஓவியத்தின் கவிதைகள் இடம்பெற்றன. கவிஞர்கள் சிவதாசன், ஜோதி, சோ.பிரபாகரன், ரஜினி செந்தில், ஆர்ஆர்பி சார்பாக குழந்தைவேல், தங்கவேல் சார்பாக பிஆர்.கணேசன், ஆசிரியை மீனாட்சி, பேச்சிமுத்து, காயாதவன், மாணவி சிந்து, மாணவர் அமர்நாத் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
சிறுமி கிருபாவின் கார்ட்டூன் ஓவியம் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டது. சிற்பக் கலைஞர் ஆனந்தின் முட்டை மற்றும் மூங்கில் சிற்பங்களும் அவரது சிற்பப் படங்கள் நிறைந்த தொகுப்பும் பார்வைக்கு வைக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் திரு.ஈஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் சுப்பாரதிமணியன், புதுகை சஞ்சீவியின் ‘வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். தொகுப்பிலிருந்து மூன்று கதைகளை தோழர்கள் கே.பொன்னுசாமி, கோவை சதாசிவம், ரகுகுமார் ஆகியோர் கதையாகச் சொன்னார்கள்.
சஞ்சீவியின் புத்தகம் 10 பிரதிகள் விற்பனையானது. அடுத்து புதுகை சஞ்சீவி ஏற்புரை நிகழ்த்தினார். கந்தர்வன் சிறுகதைப்போட்டி 2008 ல் ஆறுதல் பரிசு பெற்ற தாண்டவக்கோனின் சான்றிதழை அறிவிப்போடு வழங்கினார். தோழர்.கே.அருணாச்சலம் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்வு; 003
9/11/2008 அன்று..
வேலம்பாளையம் ரங்கநாதபுரத்தில் நடைபெற்ற பயங்கர வாத எதிர்ப்புக் கூட்டத்தில் ‘மின்சார டாக்டர்’ நாடகம் நடத்தப்பட்டது.

நிகழ்வு; 004
16/11/2008 அன்று..
அண்ணா காலனிப் பகுதியில் ‘நல்ல தம்பி’ சிறுவர் நாடகம் நடத்தப் பட்டது.

நிகழ்வு; 005
16-01-2009 அன்று...
அண்ணா காலனிப் பகுதியில் நடைபெற்ற பொங்கல் கலைவிழா நிகழ்ச்சியில் தமுஎச வடக்கு கிளை சார்பாக ‘மாப்பிள்ளை கடை’ மற்றும் ‘ஒத்திகை’ ஆகிய நாடகங்கள் நடத்தப்பட்டன.
மாப்பிள்ளை கடை நாடகத்தில் ரகுகுமார், பாண்டியராஜன், சின்னச்சாமி, வேணுப்பிள்ளை மற்றும் பெரியார் காலனி குழுவினர் 4 பேர் பங்கேற்றனர்.
ஒத்திகை நாடகத்தில் பி.ஆர்.கணேசன், ரங்கராஜன், தாண்டவக்கோன், ரகுகுமார், ராம் ஆனந்த், சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வு; 006
30-01-2009 அன்று..

மகாத்மா காந்தி நினைவு நாளில் திருப்பூர் மாநகராட்சி வளாகத்தில் காந்தி சிலை முன்பாக தமுஎச மாவட்டக் குழு சார்பாக நடைபெற்ற ‘ பயங்கர வாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு’ கூட்டத்தில் தமுஎச திருப்பூர் வடக்கு கிளை சார்பாக பிஆர்.கணேசன், தாண்டவக்கோன், ரகுகுமார், குழந்தைவேலு, அய்யப்பன், ரவிக்குமார், தூயவன், அருணாச்சலம், பாண்டியராஜன், சந்திரசேகர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வு; 007
30/1/2009 முதல்...
திருப்பூர் 6வது புத்தகக் கண்காட்சி 2009 ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக 30/1/2009 முதல் 8/2/2009 வரை 10 நாட்கள் குறும்பட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சராசரியாக நாளன்றுக்கு 40 பார்வையாளர்கள் பங்பேற்றனர். தமுஎகச மாவட்டக் குழு தோழர் ராஜாமணி மற்றும் வடக்குக் கிளை தாண்டவக்கோன், ஆர். ரவிக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

நிகழ்வு; 008
22/02/2009 அன்று...
மாலை 6மணிக்கு திருப்பூர் காந்திநகர் அப்ரோ-90 தோழர் ஈஸ்வரன் இல்ல வளாகத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க வடக்கு கிளையின் மாதாந்திர இலக்கிய அமர்வு நடத்தப்பட்டது. மூத்த தோழர் ஆர்.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில் நிகழ்ச்சிகள் தொடங்கின.
கவியரங்க நிகழ்ச்சியில் ஏற்கனவே தரப்பட்ட அழைப்பிதழ் ஓவியத்தின் கவிதைகள் இடம்பெற்றன. கவிஞர்கள் சிவதாசன், ஜோதி, சோ.பிரபாகரன், ஆர்ஆர்பி, தங்கவேல், காயாதவன், யாழி, பேச்சிமுத்து, காயத்ரி சார்பாக தாண்டவக்கோன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
தி.குழந்தைவேலுவின் ‘அகலாத நினைவுகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூலை அறிமுகம் செய்து தோழர் கே.பொன்னுசாமி வாழ்த்துரை வழங்கினார். தொகுப்பிலிருந்து இரண்டு கதைகளை ஆசிரியர் ரமேஷ்குமார், பி.ஆர்.கணேசன் ஆகியோர் கதையாகச் சொன்னார்கள். அகலாத நினைவுகள் புத்தகம் 4 பிரதிகள் விற்பனையானது. அடுத்து தி.குழந்தைவேலு ஏற்புரை நிகழ்த்தினார்.
ஆர்.ரவிக்குமாரின் ‘எதிர்வினை’ குறும்படத்தை தோழர் அருணாச்சலம் வெளியிட ஆசிரியர் சந்திரன் பெற்றுக் கொண்டார். கிருஷ்ணா தியேட்டர் பிகே.சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
துசோ.பிரபாகரின் ‘தக்காளி’ குறும்படத்தை தோழர் ஆர்.குமார் வெளியிட பழ.விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார். தக்காளி 6 பிரதிகள் விற்பனையானது. தொகை படைப்பாளிக்குத் தரப்பட்டது.
ராமின் ‘உருமாற்றம்’ குறும்படத்தை தோழர் சி.சந்திரசேகர் வெளியிட தோழர்.டிஎம்எல். ஆறுமுகம் பெற்றுக் கொண்டார்.
குறும்பட இயக்குனர்களை வாழ்த்தி தாண்டவக்கோன் உரையாற்றினார். நிகழ்வில் ‘ஒருநிமிடம்’ மற்றும் ‘சென்ஸ்’ குறும்படங்கள் திரையிடப்பட்டன. அனைத்துக் குறும்படமும் திரையிட்ட பிறகு பார்வையாளர்களின் கருத்து கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. தோழர் வேநா. கணேஷ்குமார் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

நிகழ்வு; 009
22/03/2009 அன்று...
மாலை 5 மணிக்கு திருப்பூர் அப்ரோ-90 வளாகத்தில் மாதாந்திர அமர்வு நடத்தப் பட்டது. பிஆர்.கணேசன் தலைமை வகித்தார். நிகழ்வுகளை தாண்டவக்கோன் தொகுத்தளித்தார்.
கவியரங்கத்தைத் தொடர்ந்து திருப்பூர் குமாரின் ‘தீட்டு’ நாவல் அறிமுகப்படுத்தப்பட்டது. கதை சொல்லி அறிமுகம் செய்தார் கே.ரங்கராஜ்.
சென்னை நா.மணிமேகலை நாகலிங்கத்தின் ‘தூ’ குறும்படம் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டது. மேலும் சென்னை எம்.சிவக்குமாரின் ‘கண்ணீர் துடைப்போம்’ எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டு கருத்துக் கேட்கப்பட்டது.
கோவை சதாசிவம் வாழ்த்துரை வழங்க திருப்பூர் குமார் ஏற்புரை செய்தார். நிகழ்வில் 50 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்வு; 010
13/9/2009 அன்று...
திருப்பூர் பெரியார் காலனி துவக்கப் பள்ளி வளாகத்தில் மாலை 6.30 மணி முதல்8.30 மணி வரை சங்கத்தின் மாதாந்திர இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியார் காலனி தோழர்கள் செய்திருந்தனர். 6.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது. ரகுகுமார் வரவேற்புரையும் பி.ஆர்.கணேசன் தலைமையுரையும் நிகழ்த்தினர். நிகழ்ச்சியை தாண்டவக்கோன் தொகுத்தளித்தார்.
கவிஞர்கள் மதுராந்தகன், அருணாச்சலம் ஆகியோர் ‘விலைவாசி ஏவுகணை’ எனும் தலைப்பில் கவிதைகள் வாசித்தனர்.
கவிஞர் நிறைமதியையும் அவரது கவிதைத் தொகுப்பையும் வேலா.இளங்கோ அறிமுகம் செய்து பேசினார். நிறைமதி ஏற்புரை நிகழ்த்தினார்.
மாயமான் இயக்குனர் து.சோ.பிரபாகர் அறிமுகம் செய்யப் பட்டார். மாயமான் குறும்படத்தை டி.சரோஜா வெளியிட்டார். திமு.ராசாமணி திரையிட்டு மதிப்புரை வழங்கினார்.
கனவு இயக்குனர் ராம் அறிமுகம் செய்யப் பட்டார். கனவு குறும்படத்தை கே.ரங்கராஜ் வெளியிட்டார். மதுராந்தகன் மதிப்புரை வழங்கினார்.
நிகழ்வுகள் பற்றிய கருத்துக்களைப் பார்வையாளர்கள் பதிவு செய்தனர். இயக்குனர்கள் து.சோ.பிரபாகர் மற்றும் ராம் ஏற்புரை நிகழ்த்தினர்.

நிகழ்வு; 011
29/11/2009 அன்று..
திருப்பூர் அணைப்பாளையத்தில் மாதாந்திர இலக்கிய அமர்வாக ‘திரைவிழா’ நடைபெற்றது.
மாதர் சங்கக் கிளைச் செயலாளர் செல்வி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. தாண்டவக்கோன் நிகச்சியினை ஒருங்கிணைத்து வழங்கினார்.
நிகழ்வில் பாரதி கிருஷ்ணகுமாரின் ‘என்று தணியும்’ ஆவணப்படமும் தாண்டவக்கோனின் ‘இப்படிக்குப் பேராண்டி’ குறும்படமும் திரையிடப் பட்டன. அய்யப்பன் நன்றி கூறினார். நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வு; 012
12/12/2009 அன்று...

திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெற்ற தமுஎகச வின் கலை இரவுக்காக தமுஎகச ‘வரிசை’ எனும் நாடகம் தயாரிக்கப்பட்டது. 6/12/2009 முதல் 12/12/2009 வரை தீவிர ஒத்திகை நடத்தப்பட்டது. கலை இரவு மேடையில் நாடகம் அனைவரும் பாராட்டும் வகையில் அரங்கேற்றப்பட்டது. நாடகக் குழுவில் ரகுகுமார், பாண்டியராஜ், வேணுப்பிள்ளை, சின்ராஜ், தாண்டவக்கோன், ராம்ஆனந்த், சண்முகம், தெற்கு சண்முகம், மணி, லெனின், அப.குமார் ஆகியோர் நடித்தனர். பிஆர்.கணேசன் மற்றும் வீரபாண்டி குமார் நிர்வாகித்தனர்.

நிகழ்வு; 013
25/12/2009 அன்று...
சிறுபூலுவ பட்டியில் ‘சவம்’ மற்றும் ‘வரிசை’ நாடகங்கள் நடத்தப்பட்டது.
புதிய உறுப்பினர் சுபாஷ் மற்றும் ரங்கராஜ், ரகுகுமார், தாண்டவக்கோன், பாண்டியராஜ், ராம்ஆனந்த், நவநீதன், சின்ராஜ், சந்திரமோகன், கார்த்தி,(பெரியார் காலனி சிறுவன்) , லெனின், சண்முகம் ஆகியோர் நாடகங்களில் நடித்தனர்.

நிகழ்வு; 014
02/01/2010 அன்று..
மாலை 6 மணிக்கு திருப்பூர் காந்திநகர் முத்தண்ண செட்டியார் திருமண மண்டபத்தில் இலக்கிய அமர்வு நடத்தப்பட்டது.
நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ஆதவன் தீட்சண்யா அவர்களோடு இலங்கைப் பயண அனுபவங்களின் கலந்துரையாடல் நடைபெற்றது.
6,45க்கு தொடங்கிய கலந்துரையாடல் இரவு 9,45 வரை இடைவிடாது நடந்தது. பங்கேற்பாளர்களின் இலங்கை நடப்புக்கள் குறித்த கவனத்தை உணர்த்தியது. 60க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். தாண்டவக்கோன் தொகுத்தளித்து நன்றி கூறினார்.

நிகழ்வு; 015
16/1/2010 அன்று...

வேலம்பாளையம் பிகேஆர் நகரில் நடந்த விளையாட்டு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக ‘கதைகள் திருடும் கனவுப் பெட்டி’ எனும் குழந்தைகள் நாடகம் நடத்தப்பட்டது. பெரியார் காலனிப் பகுதியைச் சேர்ந்த 15 குழந்தைகள் நடித்தனர். நாடகத்தை 600க்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்தனர்.

நிகழ்வு; 016
17/1/2010 அன்று...

ஜீவா காலனியில் நடந்த நடந்த விளையாட்டு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக ‘கதைகள் திருடும் கனவுப் பெட்டி’ எனும் குழந்தைகள் நாடகமும் ‘சவம்’ மற்றும் ‘சும்மா’ எனும் நாடகங்களும் நடத்தப்பட்டது. சுமார் 800 பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

நிகழ்வு; 017
29/1/2010 முதல்...

திருப்பூர் 7வது புத்தகக் கண்காட்சி 2010 ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக 29/1/2010 முதல் 7/2/2010 வரை 10 நாட்கள் குறும்பட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சராசரியாக நாளன்றுக்கு 60 பார்வையாளர்கள் பங்பேற்றனர். தமுஎகச வடக்குக் கிளை தாண்டவக்கோன் மற்றும் ஆர். ரவிக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

நிகழ்வு; 018
4-7-2010 அன்று ...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க இலக்கிய அமர்வு நடந்தது. மாலை 6 மணிக்கு தொடங்கிய அந் நிகழ்வில் திருப்பூர் கவிஞர்கள் சிவதாசன், ரத்தினமூர்த்தி, ரஜினிசெந்தில் ஆகியோர் கவிதை வாசித்தனர். ஆர்.ஈஸ்வரன் அனுப்பியிருந்த கவிதை ஒன்றும் வாசிக்கப் பட்டது.
-
பன்முக ஆய்வுக்காக 'லைப் ஈஸ் பியூடிபுள்" எனும் இத்தாலியப் படம் திரையிடப் பட்டது.படத்தின் கதை நுட்பம் காட்சிக் கூறுகள் குறித்து விளக்கப்பட்டது.பார்வையாளர்கள் பெரிதும் வரவேற்றனர்.
-
மேலும் நிகழ்வில் திருப்பூர் ரவிகுமாரின் 'கண்ணாமூச்சி' எனும் குறும் படத்தை பி.ஆர்.கணேசன் அறிமுகம் செய்து திரையிட்டார். கண்ணாமூச்சி பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.
-
நிகழ்வில் திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்க பொறுப்பாளர்கள் , தமுஎகச வினர், குறும்பட இயக்குனர் ரவிகுமார் நடிகர் ஜெயபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வை வழக்கறிஞர் ரவி, தாண்டவக்கோன் ஒருங்கிணைத்தனர். 50 பார்வையாளர்கள் பங்கேற்றனர்..